தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!!

ஔவையார்



ஔவையார் எல்லாத் தமிழருக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவராவர்.தமிழ்த் தாயைத் திருத்தொண்டினால் போற்றியவர்கள் நாலு வகைப்படுவர். முதலில் பிறைசூடிக்கடவுளும் அவர் திருமகனாகிய முருகனும் தெய்வ வகையினராவர். தேவ வகையைச் சேர்ந்த இந்திரன் இரண்டாம் வகையினன். மூன்றாவதாக அகத்தியர், இவர் முனிவ வகையினராவர். நான்காவதாக மானிட வகையினர், இதில் பல்லாயிரக்கணக்கானப் பெண்களும் ஆண்களும் அடங்குவர். பிற இனங்களும் நாகரியங்களும் பண்டைய காலத்தில் பெண்களுக்கு அறிவு கூடாதெறு, பெண்களை அடக்கிய காலத்தில், தமிழரிடையே ஔவையார், வெள்ளிவீதியார், பூதபாண்டியன் தேவியார், ஆதிமந்தியார் போன்ற பல பெண் தமிழ்ப் புலவிகள் கடைச்சங்க காலத்தில் நிலவினர் என்பது தமிழர்களின் உயர்ந்த பண்பாடுக்கு ஒரு உதாரணமாகும். இவர்களுக்குள் ஔவையார் தலைசிறந்தவராவார்.
ஔவையாரின் வரலாற்றைப் பார்த்தால் மூன்று ஔவைகள் தமிழகத்தில் வேவ்வேறு காலத்தில் 12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தனர் என்பது புலப்படும். இவர்களில் முதலானவர் வள்ளுவர், நக்கீரர் போன்ற புலவர்கள் வாழ்ந்த கடைச்சங்க காலத்திலும், இடையானவர் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் போன்ற பக்தி இலக்கியப் புலவர்கள் காலத்திலும், கடையானவர் கம்பர்,செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்ற புலவர்கள் காலத்திலும் வாழ்ந்தனர் என்பர். இம்மூவரும் ஒத்த பெயர் மற்றும் இயல்புகளை உடையவர்களாதலால் பிற்கால மக்களால் ஒருவராக கருதப்பட்டனர் போலும். மேலும் அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்த, நீண்டகாலம் வாழ வைக்கும் சிறப்புப் பொருந்திய நெல்லிக்கனியை இவர் உண்டமை, இக்கருத்துக்கு வலுச் சேர்த்திற்று என்பர்.
இம்மூவரில் ஒருவர் பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் ஏழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையைப் பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். அவ்வெண்பா கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இட்டமுடன் இன்தலையில் இன்னபடி என்றேழுதி
விட்டசிவ னும்செத்து விட்டானோ-முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவனுக் கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ
ஒளவை என்ற சொல்லின் பொருள்
ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது.
ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்.
பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.
[4].
ஔவையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.
முதலாம் ஔவையார்
சேரசோழபாண்டியர், மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சி, முல்லைக்குத் தேரீந்த பாரி வள்ளல், காஞ்சித் தொண்டைமான். மலையமான் திருமுடிக்காரி, நாஞ்சில் கோமான் வள்ளுவன் போன்ற தமிழகத்தை ஆண்ட கடைச் சங்க கால மன்னர்களை ஔவையார் தமிழால் ஆண்டார் என்றால் மிகையாகாது. இவரின் நண்பனும் பெரும் வீரனுமாகிய தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுக்கும் பொருட்டு,சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் மாநாடு கூட்டித் திட்டங்கள் வகுத்த போது, அங்கு வந்த ஔவையார் கூடியிருந்த மன்னர்களுக்குப் பின்வரும் பாடல் மூலமாக, அறமற்ற இப்படையெடுப்பால் அழிவு அதியமானுக்கு அல்ல, கூடியிருக்கும் மன்னர்களுக்குத்தான் என்பதை கூறி படையெடுப்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, கூடியிருந்த மன்னர்களும் இவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இதற்கு இசைந்தனர். அப்பாடலைக் கீழே காட்டுதும்:-[2]
இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.
இரண்டாம் ஔவையார்
இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றைப் பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் ஔவையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம், பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண்
எனக் கூறி நகைத்தான். குறும்புத்தனமான மதி நுட்பத்தைக் கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திப் பின்வரும் செய்யுளைப் பாடினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்
இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தான் என்பர். சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் முறையே கரியிலும் பரியிலுமேறி கயிலைக்குச் செல்வதை அறிந்த இவர் தாமும் அவர்களுடன் அங்கு செல்ல விரும்பி தாம் பிள்ளையாருக்கு வழக்கமாக செய்யும் பூசையை அவசரமாகச் செய்ய, இவர் எண்ணம் அறிந்த பிள்ளையார், அவசரம் வேண்டாம் நான் உன்னைக் கயிலைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். இதனால் மகிழ்ந்த இவர், பிள்ளையார் மீது விநாயகர் அகவல் பாடினார். பிள்ளையாரும் கூறியவாறு இவரை தும்பிக்கையால் தூக்கிக் கயிலையில் வைத்தார் என்பர். அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ, பின்வரும் செய்யுளில் பிள்ளையாரின் அருளால் இங்கு வந்தேன் என்று விடையளித்தார்.
மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போல்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!
இவர், சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் வாழ்ந்ததாகக் கருதப்படும் 8ஆம் மற்றும் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறுவர்.
மூன்றாம் ஔவையார்
இவ் ஔவையார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவையில் புலவமணிகளாக திகழ்ந்த கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோர் காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இவர் வாழ்நாளில் சுவையான நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. அவற்றுள் இரண்டை கீழே கூறுதும். மேல் கூறிய புலவர்கள் கூடியிருந்த சோழனின் அவைக்கு எளிமையை விரும்பும் இவர் வந்தபோது, அங்கு மிகுந்த ஆடம்பரத்தோடும், அளவற்ற செருக்குடனும் கம்பர் இருப்பதைக் கண்டு சினம் கொண்டு, ஆடம்பரமும் தற்பெருமையும் இகழ்ச்சிக்குரியன என்று முறையே கூறும் இரு பின்வரும் அரிய செய்யுள்களைப் பாடி, அவையோருடன் வாதம் செய்தார் என்பர்.
விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்- அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
நீண்ட தூரம் நடந்த களைப்பால்,ஒரு தாசி வீட்டுத்திண்ணையில் இளைப்பாறும் பொருட்டு இருந்த இவருக்கு அத்தாசியும் கூழ் கொடுத்து உபசரித்தாள். பின்னர் அவ்வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் எழு சீர்கள் மட்டுமே எழுதியிருக்க கண்டு, அத்தாசியிடம் அதுபற்றி வினாவ, கம்பர் 500 பொன்னுக்கு அரை வெண்பா தான் பாடுவராம், மேலும் 500 பொன் வேண்டுமாம் மிகுதியைப் பாட எனக் கூறி அழுதாள் சிலம்பி என்னும் அத்தாசி. ஔவையாரும் உள்ளம் இரங்கி மிகுதியைத் தான் பாடிச் சென்றார் என்பர். அவ்வெண்பாவைக் கீழே காட்டுதும்:-
தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே
மண்ணாவதுங் சோழ மண்டலமே- பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.
இதையறிந்த கம்பர் பின்வருமாறு ஔவையை இகழ்ந்தார் என்பர்.
கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி
இவ் ஔவையும் பல தனி நிலைச் செய்யுள்களையும் பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூலைகளையும் பாடியுள்ளார். பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூல்களில் பெரும்பாகம் காலத்தால் அழிந்துவிட்டது. மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.
ஔவையார் பலருள் அறநெறிப் பாடல்களைப் பாடிய ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்ட அறநூல்கள்
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
    • இவை இரண்டும் நூலின் முதலில் தொடங்கும் தொடரால் பெயர் பெற்றவை
  • நல்வழி
  • மூதுரை
    • இவை இரண்டும் நூலில் சொல்லப்படும் பொருளின் தன்மையால் பெயர் பெற்றவை.
    • மூதுரை நூலை 'வாக்குண்டாம்' எனவும் வழங்குவர். இது நூலின் முதலில் தொடங்கும் தொடரால் அமைந்த பெயர்

நிரைவு செய்க..

சிந்திக்க ஒரு நொடி...